Thursday, October 18, 2007

புதிர்கள் - எண் - 8

புதிர்கள் - எண் - 8

1.ஒரு கயிறை இரண்டாகவும்,இன்னொரு கயிறை நான்காகவும் மடித்து மடித்து ஒன்றுக்கு அப்புறம் மற்றொன்றாக கொளுத்தினால்,இரண்டும் எரிந்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகும் !
2.
(I)5 லிட் நிரப்பி,அதைக் கொண்டு 3 லிட் நிரப்பினால்- இருக்கும் அளவு முறையே 3 லிட்,2 லிட்,3 லிட்.
(II)இப்போது கடைசி 3 லிட் ஐ 8 லிட் க்கு மாற்றி விட்டு,5 லிட் ல் இருக்கும் 2 லிட் ஐ 3 லிட் க்கு மாற்றவும்.இப்போது முறையே 6 லிட்,காலி,2 லிட் இருக்கும்.
(III)மீண்டும் 5 லிட் ல் முழுதும் ஊற்றவும்,இப்பொது அளவு முறையே1 லிட்,5 லிட்,2 லிட்.
(IV)இப்போது இரண்டாவது 5 லிட் இருந்து மூன்றாவது 3 லிட் ஐ(ஏற்கனவே அதில் 2 லிட் இருக்கிறது) நிரப்பவும்.இப்போது முறையே 1 லிட்,4 லிட்,3 லிட்.முதலையும் கடைசியையும் சேர்த்தால் 4 லிட்,4 லிட்..டட்டடாங்ங்ங்!!!!!!!!!!!...........

சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்து


சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்து


நாடாண்மை-Governance-பற்றிய லீ சீனியரின் கருத்துக்கள் வேறெந்த ஆசிய தலைவர்களும் சொல்லாதவை.அவரின் ஆட்சியும் அவ்வாறே.Today's singapore is a classic example for his governing methods.

Wednesday, October 17, 2007

கட்டபொம்முவும் உண்மையும்

கட்டபொம்முவும் உண்மையும்

ஸ்ரீதர் வெங்கட் சொல்வது மெத்தச் சரி.
மோகன் தாஸ்,வரலாற்றுச் செய்திகளை பதியும் உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது.
உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் முக்கிய இரண்டு செய்திகள்:
1.கல்கி பொ.செல்வனில் வரலாற்றை திரித்துவிட்டார்.சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வரலாற்றில் கல்கி எழுதியதெல்லாம் இல்லை...

உண்மை:கல்கி தெளிவாகவே சொல்லி விட்டார்,பொ.செ,முடிவுரையில்.எந்தெந்த பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள்(பூங்குழலி,சேந்தன் அமுதன்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி)என்று.இன்னும் சின்னப் பழுவேட்டரையர் கூட கற்பனைப் பாத்திரம் என்ற ஒரு கூறு உண்டு.பழுவேட்டரையர் சகோதரர் இருந்திருக்கிறார்கள்,ஆனால் ராஜராஜன் காலத்திலேயே இரு சகோதரர்கள் இருந்தார்களா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.கல்கியின் வெற்றி சாதனை முக்கிய சம்பவங்களில் 'கை' வைக்காமல்,கதையை விறுவிறுப்பு குன்றாமல் கொண்டு சென்றது.(பொ.செ.ஆரம்பமானவுடன் 35000 இருந்த கல்கி இதழ் விற்பனை 72000 ஆயிற்றாம்-கல்கி நினைவலைகள்-பகீரதன்).ஒரு சரித்திரக் கதையை,பெருமளவு ஆபாசக் குப்பைகளையோ,குருட்டுக் கற்பனைகளையோ சேர்க்காமல் கொண்டு சென்றது ஒரு நிச்சய சாதனை.
2.கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன்,அவனை பெரும் வீரனாகவும் தியாகியாவும் சித்தரித்துபடம் எடுத்து விட்டார்கள்.
உண்மை:ஆங்கிலேயர் இந்தியாவில் பல பகுதிகளில் எவ்விதம் தமது ஆளுகைக்குள் கோண்டு வந்தார்கள் என்பது ஒரு மேலாண்மை தத்துவ ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்க்க வேண்டிய ஒன்று.அவர்கள் எந்த இந்தியப் பகுதியையும் ஆரம்பத்தில் தமது படைகளைக் கொண்டு மிரட்டிக் கைப் பற்றி விட வில்லை;அது வெளிப்படையாக செய்ய இயலாத ஒன்றும் கூட.வியாபார ஸ்தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்;ஏதேனும் இரு ராஜ்ஜியங்களுக்குள்(அப்போது இந்தியாவில் 550 இராஜ்ஜியங்கள் இருந்தன) பிணக்கு வரும் போது மத்தியஸ்தம் அல்லது ஒரு சாரர் உதவியாக பிரச்னைகளுக்குள் நுழைவார்கள்.அல்லது ஏதேனும் ஒரு சமஸ்தானத்திற்கு வாரிசு இல்லாதிருந்தால்,அதற்கு அருகாமை சம்ஸ்தான மன்னரை கொம்பு சீவி,ஆட்டத்தில் நுழைவது;பின்னர் படை உதவிக்கு,பாதுகாப்புக்கு பிரதியாக வருடாந்திர கப்பம் அல்லது நிலப்பகுதிகளை வளைப்பது.இதுதான் அவர்கள் முறை. கட்டபொம்மு விடயத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்;இந்த தலையீட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரர்கள் அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் முரண்டு பிடிக்கிறான் என்ற நிலையில் அவனை எவ்வளவுசீக்கிரம் ஒழிக்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களின் agenda பழுதுபடாமல் நடக்கும்.
ஆங்கிலேயருக்கு ஆப்படிக்கத்தான்,ஒரு யுத்த தந்திரமாக,அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பாளையத்தின் நெற்களஞ்சியங்களுக்கு நெருப்பு வைத்தழிக்கிறான் கட்டபொம்மு.இதை சாக்காகக் கொண்டு,அவன் கொள்ளையடிக்கிறான்,நான் நீதி செய்கிறேன் பேர்வழி என்றுதான் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதை எடுத்துக் காட்டத்தான் வீ.பா.க.பொ.படத்திலும் ஒரு கட்டத்தில் தளவாயின் கொள்ளைச் சம்பவத்தை கடிந்து கொள்ளும் கட்டபொம்மு'உங்கள் செயல்,எதிர்காலச் சமூகம் என்னை கொள்ளையன் என்று பழி சொல்ல வழி வகுத்துவிட்டது' என்று ஒரு வசனத்தில் வேதனைப் படுவதாகக் காட்டுவார்கள்...
விடுதலைப் போரில் தமிழகம்-இரு தொகுதிகளாக ம.பொ.சி எழுதிய நூலைப் படித்துப் பாருங்கள் !!!!

Monday, October 15, 2007

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?


இலக்குவன் கொல்வதாக செய்தி இல்லை.ஒட்டக் கூத்தர் எழுதியதாக உத்தரகாண்டம் ஒன்று உள்ளது.கம்பகாவியம் யுத்தகாண்டத்துடன் முடிகிறது.இராமன் அரசு செய்கிறான் என்பதோடும்,இராம காதையை சொல்பவர்கள்,கேட்பவர்கள் அனைவரும் நமனையும் வெல்லும் நற்கதி அடைவார்கள் என்பதோடு முடிகிறது.
பின்னர் நடைபெறும் செயல்கள் உத்தர காண்டத்தில் விரிகின்றன.சீதை காட்டுக்கு அனுப்பப்படுவது(இராமனால்),வஷிச்டர் கோபித்து சீதைக்கு துணையாக தன் மனைவியுடன் காட்டுக்கு செல்வது,லவ,குசர்கள் பிறப்பு,லவ குசர்களுக்கு ராமகாதையை வஷிச்டர் சொல்லிக் கொடுப்பது,அவர்கள் அதை அயோத்திலேயே சென்று அங்காங்கு மக்களுக்குச் சொல்வது,இலக்குவனும் இராமனை நிந்திப்பது,இருவரும் பிரிவது,இராமன் தன்னிரக்கத்தால் சரயு நதியில் மூழ்கி மாள்வது....எனச் செல்கிறது.
ஆனால் இக்கதையாக்கம் ஒட்டக் கூத்தரின் கவி இயலாமையையும்,கருத்து வெற்றிடத்தையுமே வெளிப்படுத்துவதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவார்கள்.
கம்பன் ஏன் இராமகாதையை பாடுபொருளாக எடுத்துக் கொண்டான்,ஏன் 6 காண்டங்களுடன்(யுத்தகாண்டம் ஈராக) நிறுத்திக் கொண்டான்,இராம காதையின் அரங்கேற்றம் ஆகியவை தனிப் பதிவு போடும் அளவுக்கு நீண்ட மற்றும் சுவையான செய்திகள்....
ஆக இலக்குவன் இராமனைக் கொல்லவில்லை என்பதுதான் செய்தி,இலக்குவன் நிந்தனையால் நொந்த இராமன்,தன் முடிவைத் தானே தேடிக் கொள்கிறான்..
*********************************************************************************
சர்வேசன்,
அக்னி பரீட்சையில் நீங்கள் சொல்லும் செய்தி,கம்பனில் யுத்தகாண்டத்தில்லேயே இருக்கிறது.இராவணன் மாண்ட பின் சீதை இராமனைப் பார்க்க வரும் போது இராமன் அவளை நிந்திக்க,அவள் தீப் பாய விரும்பி,இளையனை அக்னி மூட்டச் சொல்கிறாள்;இளையன் அக்னி வளர்க்க,சீதை தீப்பாய,அக்னிதேவன் சீதையின் கற்பின் வெம்மையினால் துயருற்று,சீதையை வெளிக் கொணர்ந்து,தன்னை(அக்னி) சீதையின் கற்பாம் வெம்மையிலிருந்து காக்குமாறு வேண்ட,கூட தயரதன் போன்றோரும்(ஆம்,தயரதன் வானுலகிலிருந்து வந்து சீதையை ஏற்று ஆட்சி புரிய வேண்டுகிறான் !) இராமன் சீதையை ஏற்று அயோத்தி திரும்ப ஆயத்தம் செய்கிறான்.
இந்தக் கட்டத்தில்தான் கம்பன் சீதைக்கு 'கற்பின் கனலி'-கற்பெனும் கனலால் அக்னியையே சுட்டவள்-எனும் அடைமொழி கொடுக்கிறான்.
நான் ஏற்கனவே சொன்ன சரயூவில் மூழ்கி மாள்வது-உத்தர காண்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்,இராம குமாரர்கள் லவ-குசர்கள் பிறந்த பின் நிகழ்வது..
வால்மீகத்தில் இந்த நிகழ்வுகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை..

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

மிக உண்மை. நூற்றாண்டு பழமையான,அழகழகான,மதுரை மீனாட்சி கோவிலின் பொற்றாமரைக்குள பிரகார ஒவியங்களை,சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரே நாளில் வெள்ளைச் சுண்ணம் கொண்டு அழிக்க முடியும்; ஆட்சி நிலைக்க 100 கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எந்தப் பண்ணாடையோ சொன்னான் என்று,வேக வேக ஆயத்தங்களில்,சுத்தம் செய்ய,மணல் துகள்களை,மிகு அழுத்த கம்ப்ரெஸ்ஸரக்ளில் நுட்பச் சிற்பங்கள் மீது அடித்து,அவற்றின் பேரழகை,நுட்பங்களை அழித்தொழிக்க முடியும்;
எவன் என்ன சொன்னால் என்ன???????
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யப் படும் எந்தச் செயலும் அடுத்தவரை விக்கித்துப் பார்க்க வைக்க வைக்கும்;அதன் அர்த்தம் அவர்கள் அச் செயல்களை வியந்து பாராட்டிப் பார்க்கிறார்கள் என்பதல்ல...

Friday, October 12, 2007

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

I.உங்கள் பதிவு சார்ந்த கேள்விகள்:
1.ஐந்தினை எழுபதில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்-விநாயகர் குறித்தது.
2.பிள்ளயார்பட்டியில் இருக்கும் விநாயகர்(நீங்கள் பார்த்திருக்கிறீர்களா,அது மலையில் வடிக்கப்பட்ட குடைவரை உருவம்)பீடத்தில் இருக்கும் எழுத்துருக்கள் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.தேவார காலம் வெகு பின்னர்தான்.எனவே பிற்கால சிறுத்தொண்ட நாயனார்தான் விநாயகரை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் என்பது ஏற்புடைய வாதமல்ல.
3.ஔவையாரின் வினாயகர் அகவல்-ஔவையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
4.பிரான்மலை என்னும் ஊரில்(புதுக்கோட்டை,காரைக்குடிப் பகுதி)உள்ள் குடைவரைக் கோயிலான மங்கைபாகரின்(இதுவும் பிள்ளையார்பட்டியைப் போலவே புடைப்புச் சிற்பம் வகையைச் சேர்ந்தது-சிவன் - உமை பிரதிமை) பீடத்தில் யானை வடிவம் கொண்ட ஒரு தெய்வ வடிவம் காணப்படுகிறது-இதுவும் 3-5 ம் நூற்றாண்டிலேயே காலப்படுத்தப் படுகிறது.
5.கிருத்துவின் காலத்திற்கு முன்பே சீனாவில் விநாயகர் வழிபாடு இருந்த சான்றுகள் உள்ளன.துன்ஹவாங்,குங்சியான் போன்ற இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்களில் விநாயகர் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இவைகளில் காலமும் கி.மு விலேயே உள்ளதாக துணிபு.
6.தொல்காப்பியத்தில் இரு பாக்களில் விநாயகர் பற்றிய குறிப்பு காணப்படுவதாகப் படித்த நினைவு,பாடலை உடனடி நினைவு கூர இயலவில்லை.

II ஜமாலன்,தாங்கள் சொன்ன்படி நான் சொன்னவை ஆய்வடிப்படையில் அமைந்தவை.தங்கள் குறிப்பிட்ட வேறு இரண்டு விடயங்களும் யூக அடிப்படையானவையே.(வினாயகார் அகவல் இடைச் செருகல்..அவ்வாறு இருக்க அடிப்படை இல்லை.ஏனெனில் விநாயகர் அகவலின் மொழிநடையைப் படிப்பவர்கள் ஆத்திசூடியைப் போன்றே எளிய தமிழ் நடையைக் காண்பார்கள்...மற்றபடி கோயில்களின் கட்டடக் கலை ப்ற்றி நீங்கள் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.கட்டடக் கலை அந்தந்த வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன(தகவல் தொடர்புகள் அவ்வளவு எளிதாக இல்லாத அக்காலத்தில்),எனவே அவற்றில் அவற்றில் வேறுபாடுகள் இயல்பாகவே இருந்திருக்கலாம்.. அவற்றிற்கு காரணம் ஆரியர்களில் யோசனையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல!அனானி அவர்களே,பிள்ளையார் பட்டி பற்றி நீங்கள் சொல்வதும் நடைமுறைக்கு ஒவ்வாதது..ஒரு சமண பிரதிமையை மறு பொலிவு செய்துதான் அவ்வளவு பிரமாண்டமான,கச்சிதமான-கூரைக்கும்,தளத்திற்குமான இடைவெளி மிகவும் குறைவு-(நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ,நான் பார்த்திருக்கிறேன்) சிலை அமைக்கப்பட்டது என்பது உங்கள் ஒருவரின் ஊகமாக மட்டுமே இருக்க முடியும்.மேலும் அந்த சிலையின் பீடத்தில் இருக்கின்ற சிற்பியின் குறிப்புகளின் மொழியாக்கம் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே என்பது மொழியியலாளர்கள் கருத்தும் கூட.நீங்கள் சொன்னபடி முற்கால சமணச் சிலையை பிற்கால பிள்ளையாராக்கி,அதன் பீடத்தில் மீண்டும் முற்கால எழுத்துருவைக் கொண்டு செய்தி எழுத மிகுந்த கற்பனை வளம் வேண்டும்(உங்களைப் போல!)எழுதியது சங்கப்பலகையே......

வாழ்வியல்

வாழ்வியல்


நண்பரே,நல்ல பாடல்.கொல்லான் என்ற சொல்லை மட்டும் ஏன் திருமூலர் போட்டார் என்பது கொஞ்சம் சிந்தனைக்குரியது.வள்ளுவர்,கொல்லான்,புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்றார்.நம் மக்களை புலால் உண்ணாதே என்றால்,நான் கொல்லவில்லை,எவனோ கொன்று விற்கிறான்;அதை வாங்கித்தான் தின்கிறேன் என்பான்.எனவேதான் வள்ளுவர் ஒரு கமாவை இடையில் போட்டு கொல்லான்,புலாலை மறுத்தானை என்றார்.

திருமூலர் சொல்கின்ற கொல்லான் என்பது உணவுப் பழக்கம் மட்டும் குறிப்பதன்று.

எந்தவகையிலும் கொல்வதை மறுக்க வேண்டும் என்றார்,

உயிரைக் கொல்வதை,

மனதைக் கொல்வதை,

எண்ணத்தைக் கொல்வதை,

அன்பைக் கொல்வதை,

பண்பைக் கொல்வதை,

இன்னும் எல்லா வகையினாலும் கொலையை மறுதளிப்பவன் வாழ்வாங்கு வாழ்வான் என்றார்.

மேலும் எண்குணத்தான் என்பது சைவசித்தாந்தத்தில் இறைவனின் குணங்களைக் குறிக்கும் சொல்.அந்த ஒரு சொல்லில் வாழ்வாங்கு வாழ்பவன் வாழவேண்டிய வாழ்வு இறைத்தண்மையுடைய வாழ்வு என்று ஒரு சொல்லில் சொல்லியது மூலனின் வாக்கு.

எனவேதான் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.

நல்ல பாடல்....

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

செல்லா அவ்ர்களே,
இலதாய் என்பதன் அர்த்தம் அதுவல்ல என்று தோன்றுகிறது..
சிறிது உலகம்(பூமி) பற்றி யோசியுங்கள்,
பின்னர் சூரியக் குடும்பம் பற்றி..
பின்னர் பால்வெளி பற்றி..
பின்னும் பால்வெளிக்கப்பால்??????
அங்கு என்ன இருக்கிறது ? ஒன்றும் இலதாய்,இல்லாததாய் இருக்கிறது...
இலதாய் என்றால் எல்லாமாகவும்,எல்லாவற்றிற்கு அப்பாலும்.....தான்(கடவுளே) இல்லாமல் போவதல்ல.
அண்டப் பகுதியின் உண்டப்பெருக்கம்;அளப்பரும் காட்சி,வளப்பெரும் கருணை என்று மணிவாசகர் கூறுவதும் ஓரளவு இக்கருத்தே !
அனைத்திலும் மீறி கடவுளை எப்படித் தெரிந்து கொள்வது/எப்படிப் பார்ப்பது/எப்படி உணர்வது,நான் உணராதவற்றை ஏன் நம்பவேண்டும் என்று கேட்டாலும்,பதில்-'மரத்தை மறைத்தது மாமத யாணை;மரத்தில் மறைந்தது மாமத யாணை' தான் !(திருமூலன்)மரம்(சுயம்,சுயம்-'நான்' சார்ந்த செருக்கு) தெரியும் போது யாணை(கடவுள் தத்துவம்) மறைந்து விடுகிறது;யாணை தெரிகிற போது மரம் மறைந்து விடுகிறது.
மரம் வேண்டுபவர்கள் மரத்துடன் நிற்கலாம்,யாணை வேண்டுமெனில் மரத்தைப் பகுக்கலாம் !

பொன்னியின் செல்வனும் உடையாரும்

பொன்னியின் செல்வனும் உடையாரும்
பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பியல்புகள்:
-ஒரு அருமையான கதைக் கட்டு
-பாத்திர அறிமுகங்களில் ஒரு ஒழுங்கு,சீரான தன்மை
-மிகவும் அவசியம்மான திருப்பங்கள் இல்லாதபட்சத்தில்,கதை மாந்தர்களில் குணாதிசயம் மாறாத் தன்மை
-தெளிந்த நீரோடை போன்ற கதைப் போக்கு
-வரலாற்று நிகழ்வில் கூடியவரை கற்பனையைத் தவிர்த்தது(நந்தினி,ஆழ்வார்க்கடியான்,திருந்திய உத்தம சோழன்,பூங்குழலி பாத்திரங்கள் மட்டுமே கற்பனை என்றறிகிறேன்.
-அக்காலத் தமிழர் நிலையைப் பற்றிய தெளிந்த பார்வையை விரித்தது.
-காலத்தை வென்று நிற்கும் கல்கியின் நடை
இவை ஒன்றுமே உடையாரில் இல்லை !!!
பாலகுமாரனின் இயல்புக்கே உடைய தடுமாற்றங்கள் கதை நெடுகிலும் உள்ளன.
-கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி கதைப் போக்கில் மாறுவது
-தெளிவற்ற,படிப்பவற்கு ஆயாசம் தருகின்ற கூறியது கூறல் மிகுந்த குழப்ப நடை
-வரலாற்று சான்றுகள் பெரிதுமன்றி கதை தஞ்சையையே சுற்றி வருவது.(கல்கி பொ.செ. எழுதும் பொருட்டு ஈழம் போய் வந்தார்)
-ராஜராஜனுக்கும்,ராஜேந்திரனுக்கும் ஒயாப் பிணக்கு இருந்தது என சொல்ல முயலும் கருத்து
-எல்லா கதை மாந்தரும்,பா.குமாரனுக்கு விருப்ப subject ஆன, தேவரடியாரோ,விலைமாதரோடோ சம்பந்தப் பட்டிருப்பதுபோன்று பல குறைகள்.
ஒரே நிறை என்று சொல்லலாம் எனில் கதை சமூக நிகழ்வுகளையும் தழுவிச் செல்வது.
உண்மையில் தென்னாட்டு அரசர்களில் பெரிதும் உயர்ந்திருந்த இரு வேந்தர்கள் நரசிம்ம பல்லவனும்,ராஜேந்திர சோழனும் தான்.அதிலும் கடல் கடந்து சென்று தமிழக வீரமும் பண்பாடும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வ்ரை பரவியது ராஜேந்திரன் காலத்தில் தான்.அதற்கும் பெரிதும் கட்டமைப்பு வசதிகளை திறம்பட அமைத்தவன் ராஜராஜன்.
மற்றபடி பொ.செ. மலை என்றால் உடையார் மடு !!!!
பொ.செ.வனை நான் என்னுடைய 10 வயதிலும் ரசித்தேன்,20 வயதிலும் ரசித்தேன்,,இன்று 35 வயதிலும் ரசிக்கிறேன்.50 வயதிலும் கூட ரசிக்க முடியும்.

பாலகுமாரனின் எழுத்துக்கள் இன்னும் 30 வருடத்தில் எங்கிருக்கும் என எவரும் அறியார். கானமயிலாட கண்டிருந்த வான்கோழி...நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தேட...