கம்பன் – மதுவும் மாமிசமும்..
அன்புள்ள நண்பரே,
உலக சரித்திரத்தில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை ஆக்கிய இலக்கியகர்த்தாக்கள் எல்லோரும் தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை ஆற்றுப் படுத்துவதையும் தனது கடமையாக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள்.
சில வெகு சிறப்பான இலக்கியங்கள்(திருமந்திரம் போன்றவை) சமூகத்தையும் தாண்டி இகவாழ்வு தாண்டிய விதயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றன.ஆனால் அவ்வித இலக்கியங்கள் உலக வரலாற்றில் வெகு சிலவே;அவற்றிலும் அவை தமிழ் மொழி தாண்டி வேறு மொழிகளில் நிலவுகின்றனவா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.
உலகில் உயிர் தோன்றிய காலம் முதல் மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதனும் தன் இருப்புக்கான தேவைகளையும் கருவிகளையும் ஓயாது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கிறான்; அதுவே வாழ்வியல் சிறப்புகளாகவும் அறிவியல் அதிசயங்களாகவும் இன்றுவரை மனித குலத்தை தேர்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
ஆனால் உடல் தாண்டிய விதயங்களைப் பற்றிப் பேசிய நூல்கள் இலக்கியங்கள் மிகக் குறைவே; அவ்வாறு பேசிய நூல்கள் பெரும்பாலும் இகவாழ்வில் வாழும் முறைகள் பற்றியும் அவ்வப்போது பேசிச் சென்றிருக்கின்றன.
மனிதன் உட்கொள்ளும் உணவுக்கும் அவனது சிந்தனைக்கும் விளைவான செயலுக்குமான விளைவை பல சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் இந்தக் காலத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.
அவ்விதமான விளைவைப் பற்றிய சிந்தனைகளையும், மேற்சொன்ன பேரிலக்கியங்களில் தமிழ் பெருமகனார்கள் அவ்வப்போது தொட்டுச் சென்றிருக்கிறாரகள்.அவ்விதமான செய்திகள் தமிழில் கிடைப்பது தமிழனாகப் பிறந்தவனின் கொடை.
மனிதனின் வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள் சீன மற்றும் தமிழ் இலக்கியங்கள் தவிர வேறு எவற்றிலும் பேசப் படவில்லை என்பது நான் அறிந்த வரை உண்மை.ஆனால் உடல் தாண்டிய உயிர் தாண்டிய ஆன்மாவைப் பற்றிய விதயங்களைத் தொடும் போது மட்டுமே இவ்விதமான சிந்தனைக் கொடைகள் சமூகத்திற்குக் கிடைக்கின்றன.
அந்தக் கொடையை, இலக்கியங்கள்,நிலவிய காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான அடைப்புக்கள் வைப்பது, நமது விளக்க அறிவுக்கு நாமே செய்து கொள்ளும் தடை என்பது எனது தாழ்மையான கருத்து.