Monday, June 30, 2008

"வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?"

"வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?"

//மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!//

இந்த அளவு நொந்துகொள்ளும் நிலை இப்போது இல்லையெனவே நினைக்கிறேன்.

அமெரிக்கர்களே ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்கனை பிரசிடெண்ட்டாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டார்கள்.

அங்கும் இங்கும் நிலவும்(இப்போதும்) வேறுபாடுகள் நம் தாழ்வு மனப்பான்மையினாலேயே வருபவை.ஆயினும் இந்த வேறுபாடுகள் சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே கூட நடைபெறுவது உண்டு.

என்னுடைய அலுவலக அனுபவத்திலேயே,இந்தியன்தானே என்ற எண்ணத்தில் சற்று கீழ்த்தரமாக நடத்திய என்னுடைய சீன மேலாளரை நான் அதைவிட கீழ்த்தரமாக எதிர்கொண்டேன்;அவன் என்னுடைய இந்திய ஏஜென்ஸி மேலளரிடம்,'அவன் வேலையில் மகா கெட்டிக்காரன்;ஆனால் மிகவும் அர்ரொகண்ட்'ஆன ஆள்' என்று ரிப்போர்ட் கொடுத்து என் ஒரு வருடத்திய சம்பள உயர்வில் கை வைத்தான்.

போடா ம** என்று சொல்லி விட்டு அடுத்த நிறுவனத்துக்குப் போன எனக்கு,அந்த நிறுவனத்தில் ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் மிக்க மதிப்புடன்,சக வேலைக்காரன் மற்றும் திறமைசாலி என்ற நோக்கிலேயே பழகினார்கள்;சொல்லப்போனால் நல்ல மதிப்பளித்தார்கள்!

வெள்ளையர்கள் இப்போதைய காலகட்டத்தில் திறனையே பார்க்கிறார்கள்;நிறத்தை அல்ல.

நம்மவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல்,நிறக் காரணங்கள் சொன்னால் அது பேதமையே.

Sunday, June 29, 2008

"பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்"

"பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்"

//பிரச்சனை இவை எல்லாம் பொதுபுத்தியில் கட்டமைக்கும் பெண் பிம்பம் மிக மிக ஆபத்தானது. பெண்கள் குறித்த ஒருவகை obsession தான் பாலாவின் எழுத்துக்கள்.மத்திய தரவர்க்க நிறைவேறா பாலிண்ப ஏக்கம். அது மிகவும் ஆபத்தான ஒரு கட்டமைப்பு. மோசமான உள்ளடக்கததைக் கொண்ட சிறந்த வடிவம் விஷம் தடவிய மிட்டாய் போன்றது. இவரது எழுத்துக்களும் அப்படித்தான். //

ஜமாலன்,well said.

என்னுடைய கருத்தும் அப்படியே..

ஒருமுறை இக்கருத்தைச-அவரின் ரசிகர்களின் வலைப்பூவில்-சொல்லப் போக பலத்த நிந்தனைகளை சந்திக்க நேர்ந்தது;என்னுடைய விளக்கத்தைக் கூட மட்டுறுத்த மறுத்து ரசிகர்கள் கும்மியடித்தார்கள்..

ஆனால் பாலகுமாரனைப் பற்றிய மிகச் சரியான ஒரு மதிப்பீடு நீங்கள் சொன்னதுதான்.

மோகந்தாஸ் சொன்னமாதிரி,ஆரம்பத்தில் மிகக் கீழான நிலைக்கு இறங்கிவிட்டதால் மிக மேல்நிலையை உருவகப்படுத்தும் செயலைச் செய்கிறார் என்று சொல்வதும் சிந்தனைக்கு சரியானதாகவே தோன்றுகிறது.

Monday, June 23, 2008

"உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!"

"உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!"

//நடிகர் திலகமா..கமலா நடிப்பில் சிறந்தவர் யார்?என்னைபொருத்தவரை நியாயத்தராசில் கமிலின் தட்டு சற்று கீழ் இறங்கியுள்ளது.//

நடிப்பில் சிவாஜி சிறந்தவராகவே இருந்தாலும் அவர் காலத்திய இயக்குநர்கள் உடல் மொழியை வெளிக்காட்டக் கூடிய,பார்வை ஊடகத்தின் வழியே கதை சொல்லும் பாங்கான சினிமாவை வளர்க்காத காரணத்தால்,அவரால் திரைப் படங்களிலும் ஒரு தேர்ந்த நாடக நடிகராகத்தான் வெளிப்பட முடிந்தது.விதிவிலக்காக சில படங்களில் மட்டுமே காட்சிப்படுத்துகை சார்ந்ததான உடல் மொழி நடிப்பில் அவர் தேர்ச்சியைக் காட்ட முடிந்தது.

ஆனால் கமலஹாசன் தன்னுடைய இயல்பான உலகசினிமாவை நோக்கிய ஆர்வத்தால் இந்திய சினிமா தாண்டிய பார்வையைக் கொண்டிருந்ததால்,இரைச்சலான நாடகபாணி நடிப்பை எவ்வித வழிகளால் மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து நடிப்பில் பல புதிய பரிமாணங்களைக் கொண்டுவந்தவர்;அந்த நோக்கில் சிவாஜியிடமிருந்தே தேவர் மகனில் சிறந்த,உடல் மொழி சார்ந்த,அற்புதமான underplay நடிப்பைக் கொண்டுவந்தவர் என்ற வகையில் இன்றளவும் வியக்க வைப்பவர்.

அவரிடம் அத்தகு திறமை இருக்கிறது என்பதை 70 களிலேயே இனம் கண்டவர் சுஜாதா.இந்த இளைஞர்(கமலுக்கு 23 வயதிருக்கும் போது)எதிர்கால தமிழ்சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நபராக இருப்பார் என்று க.க.பக்கத்தில் முன்னுரைத்தவர் அவர்.

இத்தகு அற்புதத் திறமைசாலியே,புணர்வைக் குறிக்கும் இடுப்பசைவை நடனக் காட்சிகளில் தமிழ் சினிமாவில் புகுத்தியவர் போன்ற விதயங்கள் கூடவே நினைவில் வருவதும் தான் விசனிக்க வைப்பன;அதற்கு முன்பு எந்த தமிழ் நடிகரும் அவ்வித அசைவுகளை தமிழ் சினிமாவில் காட்டியதில்லை(என்றே நினைக்கிறேன்).

Tuesday, June 17, 2008

"வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!"

"வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!"

நண்பா கௌதமா,இந்த 'ஒட்டு வெட்டிப்' பதிவை இப்போது நீ போட்டதால்தான் அதில் அரசியல் இருக்கிறது என்று உண்மையார் பொங்கி விட்டார்.

மற்றபடி நல்ல கும்மி....

ஆனாலும் ஆதாரமான ஒரு விதயத்தைச் சுட்ட விரும்புகிறேன்.

எந்த விதயத்தையும் விமர்சிப்பவனுக்கு அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;விமர்சிக்கலாம்.இதற்கு அந்த விதயத்தைப் பற்றி 'எல்லாம்' தெரிந்தவர்கள்தான் வர வேண்டும் எனச் சொல்வது கலைக்கு ஒத்துவராத ஒரு விதயம்.

ஒரு சினிமா விமர்சிக்கப் படும் போது ,'எங்கே நீ வந்து எடுத்துப் பாரு பார்ப்போம்' என பதில் சொல்வது,முதல்வனில்,'எங்கே நீ வந்து ஒருநாள் முதல்வரா இரு பார்ப்போம்' எனச் சொல்லும் பேதமை.

இரண்டாவது,விமர்சனம் நன்றாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதும்,நல்ல விதமாக இல்லையென்றால் விமர்சிப்பவனை விமர்சிப்பதும்,கலை அல்ல;முழுக்க அரசியல் !மணி(ரத்னம்) ஒருமுறை அழகாகச் சொன்னார்,படம் மிக மோசமாக விமர்சிக்கப் படுகிறது என்றால்,நமது பெர்ஸப்ஷனுக்கும்,பார்வையாளரின் பெர்ஸப்ஷனுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.நாம் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது என அதே ரசிகர்கள்தானே தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்,தூக்கிக் கீழே போடும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் !' என்று.எனவே உண்மை'யின் வார்த்தைகள் நான் முழுதுமாக ஏற்கிறேன்,இன்னும் படம் பார்க்காவிட்டாலும் !(நீதான் சிங்கப்பூருக்கெல்லாம் டிக்கெட் தரமாட்டேன்னு சொல்லிட்டியே!)

மூன்றாவது பதி(வர்)வுகள் பற்றிய பார்வை.பெரும்பான்மையான கும்மியாளர்கள் இருப்பினும்,சில கூர்மையான அவதானிப்புகளும்,பார்வைகளும் இங்குதான் காணக் கிடைக்கும்;அவை வணிகக்காரணங்களுக்குள் சிக்கியிருக்கும் பத்திரிகையில் கிடைக்காது;அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் நடைமுறை உலகில்-practical-இருக்கின்றன.எனவே பதிவர்கள் பார்வை பலநேரம் நேர்மையாகவும்,கூர்மையாகவும் இருக்கும்,நான்காவதாக சொல்லப்ப்டும் வகையினரைத் தவிர!

நான்காவதாக,பதிவுலகில் இருக்கும் சில குழுக்களின் ‘கட்டமைப்பு உருவாக்கம்'.இவர்கள் தங்கள் கட்டமைப்பு சித்தாந்தங்கள்,அல்லது சித்தாந்தத் தலைவர்கள் கூறுவதே முடிவு என்று இருப்பவர்கள்;திராவிடக் கட்சிகள் குழு,பிராமணர் குழு,ஈ.வே.ரா பெரியார் குழு எனப் பல...இவர்கள் கருணாநிதியோ,பெரியாரோ,சோ'வோ அல்லது ஷகீலாவோ சொல்வதே வேதம் என்று வாதிடும் வெற்று மண்டையாளர்கள்;அவர்களிடமிருந்து எந்த நேர்மையான கருத்தும் கிடைப்பது துர்பலம் !

எனவே..கருத்து சுதந்திரம் கிறுக்குத்தனமோ,குரங்குத்தனமோ அல்ல!அது பதிவுலகின் ஆரோக்கியம்.

டிஸ்கி:நானும் கமலஹாசனின் படங்களை விரும்பிப் பார்ப்பவனே;ஆயினும் இந்த விதயத்தை ஒரு விமர்சகனின் உரிமைகள் என்ற வகையிலேயே அணுகியிருக்கிறேன்.படம் பார்த்தபின் என் உண்மையான கருத்து வரும் !

டிஸ்கி 2:நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்,மற்றபடி நான் உண்மை'க்குப் போட்டி அல்ல !

Monday, June 16, 2008

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்

அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//வீரபாண்டியன் நந்தினியின் காதலனா? தந்தையா? எனற கேள்வியை வாசகர்களிடம் எழுப்பிவிட்டு அதற்கு விடையைத் தெரிவிக்காமலேயே கதையை முடித்துவிட்டார். //

நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.

பழுவேட்டரையர் மூலம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்,நந்தினி வீரபாண்டியன் மகள் என்று.இதை ஆழ்வார்க்கடியானும் உறுதி -கருத்திருமன் மூலம்-செய்வான்....

இணையத்தில் பொன்னியின் செல்வன் டாக்டரேட்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க...

:-)
*********************************************************

ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:))

நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன்.

ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.

மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d
**************************************

அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா... அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:)) நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன். ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d////

இல்லை !

இதை ஆழ்வார்க்கடியானே உறுதி செய்வான்.

பைத்தியக்காரன் - வந்தியத்தேவன் உதவியால் பாதாளச்சிறையிலிருந்து தப்பித்து ஓடும் போது ஆழ்வானிடம் படகில் மாட்டுவான்;அப்போதும் கருத்திருமன் முதலில்,தான் தான் அந்த இரு குழந்தைகளின் தகப்பன் எனக் கூறுவான்;பின்னர் ஆழ்வான் ‘நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கிக்' கேட்டவுடன்,இல்லை அந்த இரு குழந்தைகளும் என் எஜமானரின் குழந்தைகள்(வீரபாண்டியன்) என்பான்;புதைக்கப் பட இருந்த அவற்றை காப்பாற்றியது தான் தான் என்றும்,அதற்காகவாவது உயிருடன் விட்டு விடும் படியும் கேட்பான்;ஆழ்வான்,'உண்மையில் அதற்காகத்தான் விடுகிறேன்' பிழைத்துப் போ' என்று விடுவான்.

பின்னர் கதையில் நந்தினி கரிகாலரிடம் உண்மையைச் சொன்ன கணத்தில் பழுவேட்டரையர் மறைந்து கேட்பார்.

இத்தகவல் நந்தினியால் நேரடியாக அவருக்குக் குகையில் உறுதி செய்யப் படும்.அதை பழுவேட்டரையர் அரசசபையில் தான் தற்கொலை செய்யும் முன்னர் பகிரங்கமாகத் தெரிவிப்பார்....

Wednesday, June 11, 2008

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

வித்தியாசமான தளப்பதிவு.

//சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.//

இது ஒரு காரணமா என்ன?

வசந்த்'ஐ வேண்டுமானால் அந்த குறும்புக்காக செமி வில்லன்' என சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்,ஆனால் கணேஷை எப்படி அப்படி சொல்வீர்கள்?

என்னைக் கேட்டால் கணேஷ் சுஜாதா'வின் ஆதர்ச நாயகன் வடிவம்;வசந்த் அவருக்குள்ளிருந்த விளையாட்டுப் பிள்ளை வடிவம்.யோசித்துப் பார்த்தால் நம் அனைவருக்குள்ளுமே இவ்வித இரு விதமான(சிலருக்கு பல விதமான) குணாதிசயங்கள் இருக்கின்றன.

அவர்கள் இருவரின் கதாபாத்திரம் உயிர்ப்புடன் கடைசிவரை இருந்ததற்கான-சொல்லப்போனால் இன்னும் இருப்பதற்கான- காரணம் சுஜாதாவின் அகன்ற வாசிப்பு,அதனால் பரிமளித்த அவரின் அகடமிக் இண்டலிஜன்ஸ் அந்த கதாபத்திரங்களிலும் பிரதிபலித்ததே.

அப்ஸ்ட்ராட்டாக சொன்னால்,அனிதா இளம் மனைவியிலோ,நைலான் கயிறிலோ வரும் கணேஷ்,பிற்காலக் கதைகளின் வசந்த் போலதான் பிஹேவ் செய்வான்.ஆனால் யவனிகாவின் கணேஷ் சொல்லமுடியாத அளவில் முதிர்ச்சியைக் காண்பிப்பான்.

போகப் போக சுஜாதாவின் வாசிப்புகளின் பிரதிபலிப்புகள் அந்த பாத்திரங்களில் இருந்ததுதான் அவற்றின் என்றுமான வெற்றிக்கான காரணம்;அவரின் வாசிப்பு என்றுமே-கடைசிவரை- உயிர்ப்புடன் இருந்தது !

Sunday, June 8, 2008

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?
நண்பர் ரவி,நல்ல விளக்கப் பதிவு.இன்னும் சில செய்திகள் லிங்க வடிவம் பற்றி இருக்கின்றன;உடனடியாகத் தர முடியவில்லை;சிறிது பொறுத்துத் தருகிறேன்.

சிவன் எக்காலத்தவன் என்பது பற்றிய சில விவாதங்களும் படித்தேன்.நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்,அது சிறிதே காலத்தில் முந்தையதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கணிக்கிறார்கள்.

அந்நாட்களின் இந்தியாவின் கீழ்ப்பகுதி மிகவும் பரந்தி விரிந்து கீழ் இடது புறமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் சில பகுதிகள் வரை கூட இருந்திருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.அப்பகுதியின் கபாடபுரம் இடைச்சங்க காலத்தின் பெருநகராக இருந்திருக்கிறது.

இந்த தென்னகப் பகுதி மிகு உயர் நிலையில் இருந்ததால் 'தென்னாடு' எனவே அழைக்கப்பட்டிருக்கலாம்.சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை.

ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது.மாறாக பிரம்மம் என்ற உயர்தத்துவம் வடமொழி வேதங்களால் முன்னிறுத்தப்படுகிறது.இந்த பிரம்மம் என்ற சொல்லின் குறியீடாக வேதங்களும்,பிரம்ம சூத்ரமும் சொல்லும் பொருள்,தமிழில் சிவம் என்ற சொல்லால் ஆளப்படுகிறது.

இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது.

எனவே சிந்துவெளிக்கெல்லாம் முன்பே சிவ வழிபாடு,சிவதத்துவம் தென்னாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக,அந்நிலவகை காப்பாளர்கள் தம்மைக் காத்து அருளவேண்டும் என்ற livelyhood சார்ந்ததாக மாறியதால் சிறுகடவுளர் வழிபாடு பெருகி இருக்க வேண்டும்.

தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே.அதுவும் கடல்கோள்/ஆக்கிரமிப்பாளர் வழி அழிவுக்கு முன்னர் 8000 பாடல்கள் வரை இருந்ததாகவும் அழிவின்பின் எஞ்சியவை 3000 பாடல்களே எனவும் சில நூலோர் கூற்று.

மேலதிகத் தகவல்கள் தேடுகிறேன்;கிடைப்பின் பகிர்வேன்.

***********************************************************************

@அறிவன்

//நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்//

கால வரையறையின் படி இது சரியே!

//சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை//

இந்த தென்னாடுடைய சிவனே கோஷம் எங்கு முதலில் வருகிறது அறிவன்? எந்த இலக்கியத்தில் அறிகிறோம்?

இல்லை செவி வழி வழக்கு தானா?

//ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது//

ருத்ரன் என்பது வேத காலக் கடவுள். பின்னரே சிவம் என்ற வழங்கப் பெறுகிறார்.மெளலி அண்ணா/திவா சார் - இது சரியா? ரிக் வேத சாகைகளில் சிவன் என்ற சொல் இல்லையா?

//இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது//

சைவ சித்தாந்தம் என்பது இடைச்சங்க காலத்தில் இருந்ததாஇல்லைசிவம் என்பது மட்டும் கபாடபுர வழக்கில் இருந்து, பின்னர் இடை/கடைச் சங்க காலத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் என்று தலை தூக்கி, அதன் பின்னர் சைவ சித்தாந்தம் என்று நிலை பெற்றதா?

//துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;//

சிவம் என்பது மட்டும் கடற் கோளுக்கு முன்னரே, தொல்காப்பியத்துக்கு முன்னரே, சிவ தத்துவமாய் இருந்தது என்று சொல்கிறீர்கள்! நூல்கள், மக்கள் என்று அத்தனையும் அழிந்து போயினவே! அப்புறம் சிவம் என்ற இறையும் தத்துவமும் கபாடபுரத்தில் இருந்தது என்பதை மட்டும் எதைக் கொண்டு அறிகிறோம்?

//பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக//

1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.

நல்ல கோர்வையான சிந்தனையாகத் தான் இருக்கு!ஆனால் இதற்கு ஏதேனும் ஒரு சான்று, தரவு ஆவது தர வேண்டுமே! எதைக் கொண்டு இப்படி ஒரு கோர்வைக்கு வந்தோம்?

1இவ்வளவு Chronology கடற்கோளுக்கு முந்தைய சிவனைப் பற்றி அறிய முடிகிறது என்றால், எதை வைத்து அறிந்தோம்? நூலா, இலக்கியமா, புதை பொருளா? எது? - இதற்கு விளக்கம் தேவை?

2கடற்கோளில் காணாமல் போன சிவன், மாயோன்/சேயோனுக்குப் பின் எப்படி மீண்டும் வந்தார்?

இதற்கெல்லாம் விடை தேடுதல், தமிழில் இறையின் தொன்மத்தை அறிய உதவும்!

தொன்மம் அறிவது ஒவ்வொரு கலாச்சாரத்தின் சிறப்பு.பக்தி மார்க்கத்துக்குத் தொன்மம் தேவை இல்லை! சிவபெருமானை வணங்கி மகிழ்ந்து உய்வு பெறுவது அது!

இது ஒரு ஆன்மீகப் பாதை என்றால் அது ஒரு வரலாற்றுப் பாதை!

இரண்டையும் அன்பர்கள் குழப்பிக் கொண்டு பயனற்ற கும்மியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே//

திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!

சைவக் கொடி பிடிப்பதாக நினைத்துக் கொண்டு கும்மி மட்டுமே அடிப்பதைக் காட்டிலும், தங்களைப் போன்றவர்கள் செய்வதே சிறந்த சிவத்தொண்டு!

மேன்மை கொள் சைவ நெறி மேதினியில் தழைக்கட்டும்!ஓம் நம சிவாய!

***********************************************************************

///1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.////

அன்பு ரவி, Point no.4 நான் சொன்ன விதயத்தில் இல்லை.நான் சொல்ல வந்தது சிறு தெய்வ வழிபாடு எப்படி பரவலான ஆக்கம் பெற்றது என்பதைக் குறிக்க..சிவதத்துவம் ஒரேயடியாக மறைந்திருக்காது.

பதிவுலகில் பரவலாக அறியப்படும் ‘திராவிடத்'துக்கிடடையே அவ்வப்போது மின்னி மறையும் ‘மாதவித்' தெய்வம் போல மிகச் சிலருக்கான வட்டத்தில் இருந்திருக்கலாம்.

:-)

ஆயினும் உங்கள் வினா நல்ல ஆய்வுக்குரிய ஒன்று,விடை(அல்லது விடை நோக்கிய தேடல்)கூடிய விரைவில் !

/////திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!/////

இவை பற்றியும் சரியான விதயங்களுடம் மீள்கிறேன்.

என் சிற்றறிவு கருவிலே அமைந்த திருவாக என் அன்னையின் வாசனையில் வந்தது.

அவர் உண்மையான 'படிப்பாளி'.

சிறிது கடன் வாங்கி விரைவில் வருகிறேன்.

பாராட்டுக்கு நன்றி,கீதா மற்றும் ரவிக்கு.

"* லஞ்சம் சரணம் கச்சாமி *"

"* லஞ்சம் சரணம் கச்சாமி *"

சுந்தர்,அழகாக(!) எழுதப்பட்ட வலி இருக்கிறது உங்கள் வரிகளில்.இந்த கோபம் எனக்கும் பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இதற்கான தீர்வுகள் Bottom Up approach ஆக இருப்பதை விட(கிரி'யின் மனசாட்சி-காவலர் தொப்பை பதிவில் இந்த சுட்டி எதைக் குறிக்கிறது என வியக்கிறேன்-அல்லது சுட்டி மாறிவிட்டதா??) top down approach ஆக இருக்க வேண்டும்,அதுவே தீர்வுகளைத் தரமுடியும் என்று நினைக்கிறேன்,நம்புகிறேன்.

"காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)"

"காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)"

கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.காவலர்களுக்கும் ஏன் காவல்துறை அதிகாரிகளுக்குமான முதல் தகுதி உடல் தகுதி.இது ராணுவத்தில் களப்பணியில் இருப்பவர்கள் எப்படி உச்சபட்ச உடல்தகுதியுடன் இருக்க வைக்க முயற்சி செய்ய தூண்டப்படுகிறார்களோ,அதே போல் காவல் துறையும் களப்பணி சேர்ந்ததே என்ற நிலையில்,நீங்கள் சொல்லும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததும்,கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றுமாகும்.எனக்குத் தெரிந்த வரை சுமார் 15 வருடங்களுக்கு முன்வரை எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கூட நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில்-பெரும்பாலும் வாலி பால்- விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை போலிருக்கிறது.

ஆனால் சுந்தர் கூறியது-அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டும் என்ற கூற்று,பதிவின் பொதுப் பொருளான அந்தந்த வேலையாளர்கள் அந்தந்த தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்-என்ற கருத்து சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனால் சுந்தர் அவர்களின் பதிவையும்,பின்னூட்டங்களையும் படித்தேன்;அவர் சொல்லும் தீர்வு ஒரு நிறுவனங்கள் போன்ற கட்டமைப்பில் effective ஆக உபயோகம் ஆகலாம்,ஆனால் ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது,அவரின் கருத்து முற்றிலும் பாராட்டப்பட வேண்டியதே என்ற போதிலும் !

தேட...