Friday, July 18, 2008

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

கயல்..

முதலில் இந்தப் பதிவின் ஷாக் வால்யூ என்னை அதிர வைத்தது.என்னதான் தவறியிருப்பினும்,நம் நெருங்கிய சொந்தங்கள் என்னும் போது விதயங்களைச் சொல்ல சிறிது தயக்கம் இருக்கும்,அதனை மீறியும் உங்களது வலியை உணர முடிகிறது.

பல குடும்பங்களில் இந்த வித பிரச்னைகள் வேறுவேறு அளவில் இருக்கும் என்ற உண்மையும் ஏற்க வேண்டியதே.பெரும்பாலும் இந்த வித சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மனமுதிர்ச்சியின்மையினால் விளைந்த செயல்களாகவே இருக்கும்.

உங்களது தாயின் மனநிலை அணுப்பிளவின் ஒத்தநிலையில் இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.ஆனால் ஒரு சாதாரண பெண்ணால்(இயல்பில் பெண்கள் நுண்ணியல்பு மிக்கவர்கள்) இதன் கூறுகளை வெகு முன்னர் கண்டறிந்து இந்த அதிர்ச்சி அளவுக்குப் போகாது தடுத்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.

காமம் மற்றும் தாம்பத்யம் இரண்டிலும் நுழையும் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் பல உருவகங்களுடனேயே இந்தியச் சூழலில் நுழைகிறார்கள் என்பதும் என் துணிபு.காமத்திலும்,தாம்பத்யத்திலும் வெளிப்படையான பார்வைகளும் அவதானிப்புகளும் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் இந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் அதிகம்..

இன்னொரு பார்வையான் கற்பு நிலை என்பது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆணாதிக்கப் பார்வையுடனேயே அணுகப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆண் என்ற அளவில் வெட்கத்துடனேயே ஒப்புக்கொள்கிறேன்.

இப்போதிய மாறுபட்ட காலத்தில் யேசுநாதர் காலத்திய கற்பு வரையறைகள்(கற்பு நினைவின் பாற்பட்டது) சாத்தியமில்லை எனினும் நான் இதில் பாரதியின் கட்சி.

அழகாக அறிவித்தான் பாரதி,'கற்பு நிலையென்றொன்று கொண்டுவந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என !நீ பரிசுத்தமான பெண்ணை எதிர்பார்த்தால்,நீ அவளுக்கு பரிசுத்தமான ஆண்மகனாக இரு என்பதே என் நிலை.இதுவே என் மனைவியிடமும் நானளித்த உறுதிமொழி.

இதில் மாறுபாடுகள் நிகழும் போது(இன்னும்) பெண்கள் ரிசீவிங் எண்ட்'லேயே இருக்கிறார்கள் எனபதற்கு உங்கள் பதிவே சாட்சி.

இந்த சம்பவத்தில் பால் மாறாட்டம் நடந்திருந்தால் எதிர்விணைகள் எப்படி மாறி இருக்கும் என்பதே என்முதல் எண்ணமாக இருந்தது,பதிவைப் படித்து முடித்தவுடன்.எனினும் அதை சுட்டுவது உங்களைக் காயப்படுத்தலாம் என் எண்ணிக் கொண்டே கமெண்டுகளைப் படிக்கையில் நீங்களே அதை சுட்டியிருக்கிறீர்கள்;ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, hats off என்பதைத் தவிர.

மற்றபடி உங்கள் தாயின் ரியாக்‌ஷன் அவரின் மீதான் மதிப்பை கூட்டியது என்றே சொல்வேன்;தன்னிலையில் தெளிவான ஒரு பெண் இவ்விதமாகவே ரியாக்ட் செய்வாள் என்பது இயற்கையே.

அப்பர் சுவாமிகளின் திருமுறைப் பாடல்களிலே,திருப்பாணாள்வார் கதையில் இதைப் போன்ற ஒரு கட்டத்ததில் பாணரின் மனைவி அவரை ‘தீண்டுவீராயில் திருநீலகண்டம்' எனச் சொல்லி அவரைத் ‘தள்ளிவைத்த' கதைதான் நினைவுக்கு வருகிறது.

வளர்ந்த குழந்தைகள் இருக்கும் நிலையில்,இந்தியச் சூழலில் உங்கள் தாய் எடுத்த முடிவு சுயத்தை நிலைநாட்டியதுடன்,நடைமுறைச் சிக்கல்களையும் தவிர்த்த ஒன்று என்றுதான் சொல்லமுடியும்.

உங்கள் தாய் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஜால்லியடிகளில் எனக்கு உடன்பாடு இல்லை;அந்த செயல் எவ்வளவு தூரம் நிதர்சனமோ அவ்வளவு தேவை,அதை உங்கள் தாய் அறிந்ததும்.பார்க்காவிட்டால்,தெரியாவிட்டால்,மாட்டிக்கொள்ளாவிட்டால் எந்த தவறும் தவறல்ல என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

I can just say Your father deserves his getting caught !

இந்த நிகழ்ச்சி அப்படியே பால் வேறுபட்ட நடந்த சூழல்களில் கூட,குழந்தைகளுக்காக இந்த வகையிலேயே(உங்கள் அம்மாவின் முடிவு போல) ரியாக்ட் செய்த ஆண்களும் ஆங்காங்கே கிடைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

மற்றபடி உங்கள் துணிவுக்கும்,அலசல் மனதுக்கும் மறுபடி ஒரு பாராட்டு.

No comments:

தேட...