Thursday, April 7, 2011

காமச்சேறு

காமச்சேறுஅறிவன்#11802717200764379909 சொன்னது…
||உதாரணத்துக்கு: 'ஈர்க்கிடை புகா இளமுலை' என்கிறார் மாணிக்கவாசகர். ஈர்க்குச்சி புக இடமில்லாத அளவுக்கு பருத்த இளமுலை - பிரமாதமான கற்பனை. (இதற்கு முன்னும் பின்னும் நிறைய வர்ணிக்கிறார் - படு சுவாரசியம். பெண்ணை வர்ணிக்கும் கவிஞரையெல்லாம் லைன் கட்டி 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று திருவாசகத்தால் அடிக்கலாம், அத்தனை சுவாரசியம். RVS.. சேந்து படிக்கலாம் வாங்க:). எல்லாம் சொல்லி விட்டு 'ஆளை விடுறா சாமியோவ்' என்பது போல் முடிப்பதில் தான் சரிகிறது. திருவாசகத்தின் தமிழின்பம் பெண்ணின்பத்தை விட ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்வேன்; படிக்கும் போது ஒருவித போதையில் வைக்க வல்லது. ஆனால் பாருங்கள், பக்தி சத்தியமாக வரவில்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்.||

அப்பாதுரை..அழகான,பன்மொழிப் புலவரின் பெயர்..

ஆனால் பல விதயங்களை சிறிது தவறாகப் புரிந்து கொண்டு எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
உங்களுக்கு ஒரு கேள்வி வைக்கிறேன்..உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் புராணங்கள் அல்லது ப்ரீச்சிங் மெட்டீரியல் எதிலாவது காமம் கடந்து போதல் என்பது பற்றிய விசாரம் இருக்கிறதா என்பதை சிந்தியுங்கள்..

தமிழ்ச் சமூகம் மட்டும் தான் பிறப்பு,இறப்பு,இரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை மட்டுமல்லாமல் இவற்றிற்கு அப்பாலானது என்ன என்று சிந்தித்தது..

தமிழ்ச் சமூகத்தின் சைவ சிந்தாந்தம்தான்-அது மட்டும்தான்- அப் பாடு பொருள்களை விவரித்தது.

காமம் உலகியலுக்கும் உலக இயக்கத்திற்கும் அவசியமானதும்,தேவையானதும்.காமத்தில் ஈடுபட்டு,குடும்பத்தை விருத்தி செய்து உலக இயக்கத்திற்கு வழிவகை செய்து,தான் வாரிசுகளை ஆற்றுப்படுத்தி தனக்கு இனிமேல் உலகத்தில் கடமை எதுவும் இல்லை என்று ஆதித் தமிழன் சிந்திக்க நேர்ந்த காலத்தில் கிடைத்த தத்துவங்கள் சைவ சித்தாந்தமும்,இறப்புக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய ஆய்வும்,அவை சார்ந்த சித்தாந்தங்களும்..

காமத்திற்கு என்று ஒரு தனிக் இயல்பு உண்டு.உலகியலில் கிடைக்கும் எந்த விதயமும் ஒரு அளவில் சலிப்பு ஏற்படுத்தும்,ஒரளவிற்கு மேல் உண்ண முடியாது,கோட்டை கோட்டையாக பணம் சேர்த்து விட்டால் பணம் சலிப்பைத் தரும்..மனித உடலின் புலன் நுகர்வுகளில் சலிப்பேற்படுத்தாத ஒரு விதயம் உண்டெனில் அது காமம் மட்டுமே...

எனவே இறப்புக்குப் பின்னரான இயல்-இதை மெய்யறிவு என்ற அழைத்தார்கள் அவர்கள்-நோக்கிச் செல்ல விரும்புகிறாயா,ஆன்மா இறைத்தத்துவத்தில் ஒடுங்க வேண்டும் என்று விரும்புகிறாயா,காமத்திலிருந்து வெளியே வா,இல்லையேல் உனது உயிர் உடலுக்குள் உலவும் காலம் முழுதும் காமத்திலேயே கழித்து விடுவாய்,என்பதை உணர்த்தவே காமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே,அதனைப் பற்றிய இழிவான செய்திகளை எழுதி வைத்தார்கள்.

உயிர் உடலில் செயல்படும் பொழுதே உடலுக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய அறிவைத் தேடும் மனிதர்களுக்கு மட்டுமே காமத்தை விலக்க அறிவுறுத்தப்பட்டது..

காமமே விலக்கத்தக்கது என்று எந்த தமிழ் நெறியும் சொல்லவில்லை..

மற்றபடி அழகு மொழி நடையில் அருணகிரி பற்றிய பதிவுக்கு திரு மோகனுக்கு நன்றி..

************************

அப்பாதுரை சொன்னது… அ.. சுலபமா விட்டுறுவமா மோகன்ஜி? இன்னும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுவோம்.

அறிவன் அவர்களின் பின்னூட்டத்தை ரசித்துப் படித்தேன். எனக்கென்னவோ நாம் இருவருமே ஒரே கருத்தைச் சொலவது போலத் தோன்றுகிறது, அறிவன். of course, நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் (தவறாகப் புரிந்து கொள்வது எனக்கு மூச்சு விடுவது போல் இயற்கையாக வரும்).

காமத்தை ஒழி என்ற பெயரில் பெண்களைக் கேவலப்படுத்துவதைத் தான் என்னால் ஏற்கமுடியவில்லை. காமத்தை ஒழி என்று சொல்லியிருக்கலாமே - தப்பே இல்லை. பெண்ணை வர்ணித்து, பிறகு பெண்ணால் உருவாகும் காமம் என்கிற நரகந்தரும் கொடுமையை ஒழி என்பது பெண்ணால் மட்டுமே காமம் உண்டாவது போன்ற பொய்மையைப் பரப்புகிறது. பெண்ணுக்குக் காமம் கிடையாதா? அல்லது பெண் காமத்தை ஒழிக்க வேண்டாமா? பெண் பெரும்பேரடைய வேண்டாமா? அல்லது பெண்கள் ஆண் உடல் ஓட்டை பற்றிய வர்ண்ணை கொண்ட வேறு இறையிலக்கியப் பாடல்களைப் படிக்க வேண்டுமா?

இப்பாடல்கள் அன்றைய நிலவரம் மற்றும் அந்த காலக்கட்டத்து நிகழ்வுகளை ஆதிக்கங்களை ஒட்டியது என்பதால் ஓரளவுக்கு இதை நியாயப்படுத்தினாலும், பெண்களைத் தாய் (இறைவனையே தாய்) என்றதும் அதே கால இறையிலக்கியங்கள் என்பதால் இந்த முரண் தலைதூக்குகிறது. காமம் என்ற பெயரில் பெண்ணைக் கேவலப்படுத்தி எழுதிய இவர்களை எந்தப் பெண் புலவரும் எதிர்த்துப் பாடாததும் குறையே. ஆதிசங்கரரிலிருந்து இப்படி எழுதியிருக்கிறார்கள். ஒரு புறம் 'காமாக்ஷி' என்று இறைத்தாயைப் போற்றியவர் இன்னொரு புறம் 'காமாந்தகி' என்று மனிதத்தாயை - தாயின் கருவைக் கொடுஞ்சிறை, மிகக் கொடுமையான நரகம் என்ற பொருளில் - வர்ணிக்கிறார். தாய் என்பவள் நரகத்தை தன்னுள் தாங்கிக் கொண்டிருப்பவளா? தந்தையின் காமத்தால் தாய் நமக்கு நரகத்தை உருவாக்குகிறாளா? இருவரும் கூட்டு சேர்ந்து நரகத்தில் சேர்க்கிறார்களா? பெண் குழந்தையை ஒரு தட்டு குறைந்து மதிப்பிடும் நம் 'சம்பிரதாயம்' எங்கிருந்து வந்தது என்று ஏன் தேடவேண்டும்?

இந்த நாளிலும் காமத்தை ஒழி என்ற கருத்தை பெண்ணை மற என்ற ரீதியில் நாமும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

பொதுமகளிரைத் தான் சாடினார் என்று நியாயப்படுத்துவதால் நாம் :) அதன் பின்னணியில் இருக்கும் கொடுமையான உண்மையையும் நியாயப்படுத்துகிறோம்.

அறிவன், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை - எல்லா மதங்களும் உபதேசிகளும் காமம் கடந்து போதல் பற்றிச் சொல்கிறார்கள். மற்ற மதங்கள், நானறிந்த வரை கிறுஸ்துவம், இஸ்லாம், யூதம் - தகாத உறவு, முறையற்ற காமம், இச்சை பாவம், அத்தகைய பாவத்தின் சம்பளம் நரகம் (அல்லது நடுத்தெருவில் கல்லடி/சவுக்கடி :) என்று சொல்லியிருக்கிறார்களே தவிர, இந்து இறையிலக்கியம் போல் பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணித்து பிறகு பெண்ணை மற என்று சொன்னதாகத் தெரியவில்லை.

பொதுவாகவே, இறையிலக்கியத்தில் இறைவனின் காமக் களியாட்டங்களை உருகிப் பாராட்டிப் பாடும் புலவர்கள், மனிதர்களின் காமக் களியாட்டங்களை ஆழ்ந்த கசப்புடன் பாடியிருக்கும் முரண் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இவற்றைப் படிக்கும் மனதில் (பெண்ணோ ஆணோ) என்ன நினைப்புகள் ஓடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

உருப்படியா ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது மோகன்ஜி.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கலந்துக்குங்க இல்லாட்டி அப்படி ஓரங்கட்டுங்க.. :)
எனக்கு ஒரு ஆணியும் இல்லை.

*************************
அறிவன்#11802717200764379909 சொன்னது…
அப்பாதுரை, நீங்கள் ஒரு வட்டம் போட்டக் கொண்டு அதற்குள்ளிருந்து வெளியே வர மறுக்கிறீர்கள்.. பெண்ணையும் காமத்தையும் இகழும் இலக்கியங்கள் தமிழில் பெரும்பாலும் பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்களாக இருக்கும்.அதாவது தேவாரப் பாடல்கள் கூட இயல்பான பக்தி இலக்கியம்;பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்கள் என்று திருவாசகத்தைச் சொல்லலாம்,திருப்புகழைச் சொல்லலாம்,இன்னும் பட்டினத்தடிகள் பாடல்களை தத்துவார்த்தமான பக்தி இலக்கியம் என்று சொல்லலாம். இவ்வகை இலக்கியங்கள் எல்லாம் இறைவனை அடைவதைப் பற்றிப் பேசுகின்றன.கவனியுங்கள்,சாதாரணமான பக்தி இலக்கியங்கள் பெருமளவு இருக்கின்றன,தேவாரப் பதிகங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்,அவற்றில் பெரும் காமமும் இல்லை,இறைவனை அடைதல் பற்றிய அழுத்தமும் இல்லை;அதாவது ஒரு திருவாசகம் அளவுக்கோ,அல்லது திருப்புகழ் அளவுக்கோ அல்லது ஒரு பட்டினத்தடிகள் அளவுக்கோ. என்ன புரிகிறது இதிலிருந்து?? பிறப்பை ஒழிக்கும் ஒரு நிலை வரும்போது மட்டுமே இறைநிலையை ஆன்மா,அதாவது உயிர் அடையும் என்கிறது சைவசித்தாந்தம்...அந்த நிலையை நோக்கி உயிர்களை,அதாவது நமது உடலில் உலவும் உயிரை,உந்தும் நோக்கம் பற்றிய தமிழிலக்கியங்கள் மட்டுமே பெருமளவில் காமத்தை இகழ்கின்றன. இந்த நிலையை அடையப் போகிறோம் என்று உறுதியாகத் அப்பெரியார்களுக்குத் தெரிந்திருந்திருக்கலாம்..பட்டினத்தடிகளுக்கும்,ஒரு அருணகிரிக்கும்,ஒரு ஆண்டாளுக்கும்,ஒரு மணிவாசகருக்கும் அவ்வித அனுபவங்கள் அல்லது உறுதிப்பாடு கிடைத்திருக்கலாம். ஆகையினால்தான் மனிதருக்கெனில் பேச்சுப்படின் வாழ்கில்லேன் கண்டாய் என்று ஆண்டாளால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.. அந்த உறுதிப்பாடின் 1000 ல் ஒரு பங்கு கூட அடைய முடியாத நாம் இன்னும் நமீதாவையே கடந்து செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.அந்த உறுதிப்பாடு-assurance-இறைச் சக்தி அல்லது பரம் பொருளிடமிருந்தே அவர்களுக்குக் கிடைத்திருந்திருக்கலாம்,நம்மால் சொல்ல இயலாது. நாம் முழுதாக காமத்தைப் பழகவே இயலாதவர்களாக இருக்கும் போது,அவர்களின் மனப்பாடுக்குள் செல்வது இயலாத காரியமாக இருக்கும். எனவே நாம்,பெண்ணை உயர்வாகவும் சொல்லி காமத்தை எப்படி இகழலாம் என்று வாதித்துக் கொண்டிருக்கிறோம். பட்டினத்தடிகள் கூட கடைசிவரை தாய்மைக்கான கடன் இருக்கிறது என்பதை உறுதி செய்தவர் தானே..எனவே அவர்கள் பெண்மையையோ அல்லது தாய்மையையோ இகழ்ந்தார்கள் என்பது ஒத்துக்கொள்ளத் தக்கதல்ல. எது இகழப்பட்டது என்றால்,கருக்குழிக்குள் ஒரு பிறவியாக எடுப்பது,அதுவும் உயிர் இறையுடன் கலந்து விட வேண்டும் என்ற தீராத உத்வேகத் தாகம் மிக்கவர்களாக இருந்தவர்கள் வாக்கினில் மட்டும் தான் அவ்வித வாக்கு வந்தது. உயிரை உலகிற்குள் திரும்ப செயல்பட வைப்பது பொதுவாக மாயா சக்தி எனப்படுகிறது.மாயா சக்தி செயற்படுவது முதலில் காமத்தின் வழியாக.உயிர் செயல்படும் உடல் காமத்தில் அமிழும் போது உயிரின் நோக்கம் உலக நடவடிக்கைகளில் அமிழுகிறது.இது சைவ சித்தாந்தத்தின் வழி உயிர் உடல் மாயைத் தத்துவங்கள் பற்றிய விளக்கம். ஆக்ஸிலைட்டரை மிதிக்க வேண்டுமெனில் பிரேக்கிலிருந்து காலை எடுத்தாக வேண்டும்,அப்போதுதான் கார் வேகமெடுக்கும்,இரண்டும் ம்யூச்சுவலி எக்ஸ்க்ளூசிவானவை. உயிர் இறையுடன் கலக்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்டவர்களுக்கு அதை உடல் மற்றும் மாயை நிரம்பிய உலகில் இருந்து பிய்த்து எடுத்தாக வேண்டும்,காமத்தை ஒழித்தால் ஒழிய அவர்களால் அது இயலாது.. எனவேதான் பட்டினத்தடிகள் மீண்டும் மீண்டும் கருக்குழிக்குள் புகுவது அவலம் என்று பாடினார்..அவர்கள் உலக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் உயிரின் வாழ்க்கையை அல்லது நிலையை அல்லது இறைத்தன்மையைப் பார்த்தார்கள்,அதுவே இலக்காக இருந்தது.. நான் உலகின் மாயப்பாடுகளை,பெண்ணை,காதலை,வாழ்வை சித்தாந்தத்தின் பார்வையில் மாயையை நேசிக்கிறோம். நாம் பார்ப்பதும் அவர்கள் பார்ப்பதும் உயிரின்நிலை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள்.ஒரு பக்கம் உலக வாழ்வை முறித்து வேறெங்கோ,வேறு ஏதோ நிலையை அடையும் நிலை.ஒரு பக்கம் உலகம்,அன்பு,காதல்,தாய்மை போன்றவை. நாம் இந்தப் புறம் இருந்து கொண்டு அவர்கள் சொல்வது எப்படி சரி,தாய்மையைக் கேவலப்படுத்தலாமா என்று வாதித்திக் கொண்டிருக்கிறோம்;அவர்கள் நம்மைக் கைகொட்டிச் சிரித்து,முட்டாளே காமம் இவ்வளவுதான்,கொங்கை இதுதான்,உயிர்குழி இதுதான்,இதில் அமிழ்ந்து சாகாதே,கருக்குழியில் இருந்து மீள் என்கிறார்கள்... இரு பார்வைக்காரர்களும் இணக்கமாகப் போவது சற்று சிரமம்தான் ! :))


மோகன்ஜி சொன்னது…
அன்புள்ள அப்பாதுரை! உங்களுக்கு மறுமொழியை யோசித்து,பணிகளை முடித்து வலைக்குள் புகுந்த போது, அறிவனின் சைவசித்தாந்த விளக்கம்... நான் சொல்ல வந்ததைவிட ஆழமானதும் தார்மீகமுமான வாதத்தை முன் வைத்திருக்கிறார். சிலமுறை திரும்பத் திரும்பப் படித்தேன்.. லயிப்பிலிருந்து மீள்வது சற்று சிரமமாகவே இருந்தது. போகிறபோக்கில் எனக்கும் குட்டு வைத்திருக்கிறார்.இது "மோதிரக் குட்டா"ய்த்தான் தோன்றுகிறது.
மோகன்ஜி சொன்னது…
அன்பு அறிவன்! உங்கள் கருத்துகள் தெளிவாயும் தீர்க்கமாயும் உள்ளன. என் பாராட்டுதலும்,நன்றியும். சிவலிங்கக் கருத்தாய் நான் குறிப்பிட்டது முரண் என்கிறீர்கள். நான் மாதவிப் பந்தலை அவசியம் பார்க்கிறேன். பார்த்தபின் உங்களுக்கு இதுபற்றி அவசியம் எழுதுவேன். உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது. வலையில் சில ஆக்கபூர்வமான பதிவுகளைச் செய்யலாம் எனும் உறுதி உங்களைப் போல நண்பர்களால் வலுவாகிறது. மீண்டும் சந்திப்போம்.No comments:

தேட...